இந்திய முதலீடுகளை இழந்தமைக்கு ஜேவிபியே காரணம்: நாமல் விசனம்
இலங்கைக்கான கடந்த காலங்களில் பல இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய எதிர்ப்பு கொள்கையை கடந்தகாலங்களில் பின்பற்றிய ஜே.வி.பியின் இந்திய விஜயமானது கேள்விகளை தோற்றுவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணமாகும்.
இந்தியாவுக்கான சுற்றுப்பயணம்
எனினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு பார்வையை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது.
இது ஒரு நல்ல விடயம். அனுர தரப்பின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு அந்த கட்சி ஆதரவளிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி குழுவினர் ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.
விசேட சந்திப்புக்கள்
இவ்வாறு தூதுக்குழுவினர் புது டெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்லவும், விவசாயம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மையங்களைப் பார்வையிடுவதோடு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை நடத்த உள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட பல உயர்மட்ட இந்திய அதிகாரிகளை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |