ட்ரூடோவின் தேர்தல் நகர்வு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ( Justin Trudeau) அறிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசியல்
எதிர்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பதைப் பற்றி சிந்திக்க தமக்கு அதிக நேரம் இல்லை என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு கனடா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து விவாதிக்க அவர் கனடாவின் முதல்வர்கள், அமெரிக்காவிற்கான தூதர் மற்றும் சில பெடரல் அமைச்சரவை சகாக்களையும் சந்தித்துள்ளார்.
ட்ரூடோவுக்கு பதிலாக புதிய ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் உத்தியோகப்பூர்வமாக இதுவரை ஆரம்பமாகவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் சில நன்கு பிரபலமான லிபரல் தலைவர்கள் போட்டியிடுவதற்காக தங்கள் விருப்பங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆர்வமுள்ள தலைவர்கள் ஜனவரி 23 ஆம் திகதிக்குள் கட்சிக்குத் தெரிவித்து முதற்கட்டப் பணத்தைச் செலுத்த வேண்டும், மேலும் கட்சியின் புதிய தலைவர் மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கனடாவின் முன்னாள் வங்கி ஆளுநர் மார்க் கார்னி மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ஆகியோர் முன்னணி போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |