மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்
மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்
நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.