விஜயதாசவின் 21, ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தும்! சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு குறித்து இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் ஏற்பாடுகளை மீள கொண்டுவரும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்ற சட்டமூலம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 20 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீளவும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியும் உறுதியளித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, நீதியமைச்சரின் வரைவு, அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்கு பதிலாக, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பலப்படுத்துவதன் மூலம் இந்த வரைவுச் சட்டமூலம் எதிர்மாறாக செயற்படுவதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.