உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதம்: விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
பூமியின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை, ஜூலை மாதத்தில் பதிவாகும் என்று உலகெங்கிலும் உள்ள முன்னணி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக வானிலை ஆய்வகமும் ஐரோப்பாவின் கோப்பர்நிகஸ் வானிலை ஆய்வு நிலையமும், "இது உலக வரலாற்றில் ஆக வெப்பமான மாதமாக விளங்கக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளன.
மேலும், 2019 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட வெப்பநிலையின் சாதனையை இது முறியடிக்கும் என்றும் பூமியின் வெப்பநிலை வெப்பமடைதல் வரம்பைக் கடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொதிநிலை காலகட்டம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “உலக வெப்பமயமாதல் என்ற சகாப்தம் முடிவடைந்து இப்போது உலகக் கொதிநிலைக் காலகட்டம் ஏற்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு இலட்சத்து 20,000 வருடங்களை கணக்கிட்டாலும் ஜூலை போன்ற வெப்பமான காலநிலையை பதிவு செய்யக்கூடிய ஒரு மாதத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலக வெப்பநிலை அதிகரிப்பு
1800களின் பிற்பகுதி முதல் உலக வெப்பநிலை கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
இதனால் அடிக்கடி வெப்ப அலை, சூறாவளி, வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றன.
இத்தகைய பருவநிலை மாற்ற விளைவுகளால் உலகளாவிய நிலையில் சுகாதாரம், பல்லுயிர்ச் சூழல், பொருளியல் போன்றவை மிகவும் பாதிக்கப்படும் என்பதை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக மாறும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
