வெலிகடை கைதிகள் படுகொலை வழக்கின் தீர்ப்பு ஜனவரியில்
கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் வெலிகடை சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சித் லமாஹேவா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் நடந்த இந்த படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவும் கவனம் செலுத்தி இருந்தது.
அத்துடன் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிறைச்சாலையில் நடந்த இந்த படுகொலையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சுமார் மூன்று ஆண்டுகள் நடைபெற்றன.