உறவுகளை தேடும் பயணத்தில் அனைவரின் ஆதரவும் தேவை! ஆ. லீலாதேவி வேண்டுகோள்
எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் பயணத்தில் எல்லோருடைய ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி மற்றும் செயலாளர் ஆ. லீலாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக நடைபெற்ற பேரணி, பூரண கடையடைப்புக்கு ஆதரவு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி நிகழ்வானது சர்வதேச கவனத்தை ஈர்க்குமளவு மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியமை யாவரும் அறிந்ததே. இதற்கு உறுதுணையாக இதில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
பூரண ஒத்துழைப்பு
அனைவரும் உங்களில் இனத்திக்கான கடமையை செய்ததை நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். அதேநேரம் குறுகிய காலத்தில் எமது வேண்டுகோளை அனுப்பியிருந்தும் அதை ஏற்று பூரண ஒத்துழைப்பை நல்கிய வர்த்தக சங்கங்களுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடிதம் மூலம் அழைப்பு அனுப்புவதற்கு நேரம் போதாமையால் தொலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்படுத்தி அழைப்பு விடுத்திருந்தோம். அதையும் பெரிய மனதுடன் ஏற்று பேரணிக்கு வருகை தந்த மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர் அனைவருக்கும் எமது நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.
மேலும் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளிற்கு பொருத்தமான நடவடிக்கைகளைச் செய்தது மட்டுமல்லாது தாங்களும் கலந்து கொண்ட கல்வியாளர்களுக்கும், எமது பிள்ளைகள் போல் எம்முடன் தொடர்ந்து பயணிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உறவுகளை தேடும் பயணம்
இறுதியாக, நாங்கள் போராட்டம் தொடர்பில் அறிவித்தல் விடுத்ததும் தாங்களாகவே
முன்வந்து எமது பேரணிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து தரப்பினருக்கும் எங்கள்
நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
தொடர்ந்தும் எமது உறவுகளை தேடும் பயணத்தில் உங்கள் அனைவரின் ஆதரவுகளையும்
தொடர்ந்தும் வேண்டி நிற்கின்றோம் எனவும் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
