அம்பாறையில் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அம்பாறையில் (Ampara) போதைப்பொருளுடன் கைதான நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது, எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரால் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கமைய 7 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து,நேற்றைய தினம் (24) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, 24 வயதான அப்துல் கையூம் பிசால் அகமட் எனப்படும் சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்ததுடன் அவற்றை உபயோகித்தும் வந்துள்ளாரென தெரிய வந்துள்ளது.
புனர்வாழ்வு முகாம்கள்
மேலும், கடந்த காலங்களில் சந்தேக நபர் பல தடவைகள் கைதாகி உள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்காக புனர்வாழ்வு முகாம்களிலும் சிகிச்சை பெற்றிருந்தார்.
அது மாத்திரமன்றி, சந்தேக நபரின் தந்தையார் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனமொன்றில் விசேட ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து 1090 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |