இலங்கை ஜனாதிபதியை மிஸ்டர் பிறசிடன்ற் என அழைக்க முடியும்: பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிகையாளர்
கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை என ஊடக விரிவுரையாளரும், பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை ஒரு செய்தியாளர் மிஸ்டர் பிறசிடன்ற் (Mr. President) என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியுமானால், மாகாண ஆளுநர் ஒருவரை மிஸ்டர் கவர்னர் என்று ஏன் அழைக்க முடியாது எனவும் வினவியுள்ளார்.
இது தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது.
இழைக்கப்பட்டுள்ள அநீதி
அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கொள்ள அனுமதித்திருக்கக் கூடாது. ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறமை பட்டவர்த்தனமாகிறது.
04 ஆகஸ்ட் 2023 அன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண ஆளுரை மிஸ்டர் ஆளுநர் (Mr. Governor) என்று சசி புண்ணியமூர்த்தி விளித்துக் கூறியதாலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிக் கேள்வி கேட்டமையினாலுமே, வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பிபிசி, அததெரன, ஐபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு சசி புண்ணியமூர்த்தி பல வருடங்கள் செய்தியாளராகக் கடமையாற்றி வருகிறார். அது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவரை செய்தியாளர் அல்ல என்று குறிப்பிட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டமை ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
இலங்கை அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை ஒரு செய்தியாளர் மிஸ்டர் பிறசிடன்ற் (Mr. President) என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியுமானால், மாகாண ஆளுநர் ஒருவரை மிஸ்டர் கவர்னர் என்று ஏன் அழைக்க முடியாது?
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர்கள், நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் எவரையும், செய்தியாளர்கள் சேர் (Sir) என்றோ அல்லது மாண்புமிகு (Honorable) என்றோ அழைக்க வேண்டிய அவசியமே இல்லை.
சசி புன்னியமூர்த்தி கூறியது தவறு அல்ல
மாறாக அவர்களின் பதவிக்கு முன்னால் மிஸ்டர் என்று விளித்துக் கூறினால் போதும். அந்தச் செய்தியாளின் முறுக்கையும் (Proud) அது வெளிப்படுத்தும். ஆகவே மிஸ்டர் ஆளுநர் என்று சசி புன்னியமூர்த்தி விளித்துக் கூறியமை தவறானது அல்ல.
மிக எளிமையான முதுகெலும்புள்ள, முறுக்குள்ள ஊடகவியலாளர் என்றே, அவர் தன்னைப் பொது வெளியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆகவே ஊடகவியலாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
அத்துடன் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருப்போர் மாத்திரமே ஊடகவியலாளர் என்ற ஒரு விதியும் இல்லை. அந்த வார்த்தை மிக மிக ஆபத்தானது.
நேர்மையான சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டையைப் பயன்படுத்த விரும்புவதில்லை. ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு இழைக்கப்பட்டமை அநீதி என்பதை ஊடக அமைப்புகள் வெளிப்படுத்த வேண்டியது கட்டாயப் பணி.
ஏனெனில் சசி புண்ணியமூர்த்திக்கு ஏற்பட்ட பாரபட்சம் ஒரு தேசியப் பிரச்சினை. ஆகவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும், ஏனைய ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



