முன்னாள் எம்.பி ஜோன்ஸ்டனின் மனு தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மனுதாரர் தரப்பு கோரிக்கை
மேலும், அன்றைய தினம் விசாரணைகளை முடித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வழக்கு தொடர்பான மேலதிக ஆவணங்களை நீதிமன்றில் முன்வைத்து குறித்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்தி அதற்கான திகதியை வழங்குமாறு சட்டத்தரணி கோரியுள்ளார்.
இதன்படி, மனுவை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் உண்மைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |