யாழில் அதிகாலையில் நடந்த நகை திருட்டு - 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவில் நகை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (08.03.2026) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று (08) அதிகாலை 1.00 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த கணவரை தாக்கியதுடன், மனைவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த கணவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதலின் போது கணவரால் எதிர்த்தடுப்பு மேற்கொள்ளப்பட்டதால் திருடர்களில் ஒருவர் காயமடைந்து இரத்தம் சிந்தியபடி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாரின் அசமந்தப்போக்கு
மேலும், திருடர்கள் கத்தி முனையில் அச்சுறுத்திய நிலையில், மருதங்கேணி பொலிஸாருக்கும் அவசர இலக்கங்களான 119 மற்றும் 118 ஆகியவற்றிற்கும் தகவல் வழங்கப்பட்டதாகவும், இருப்பினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சுமார் 8 மணிநேரம் கழித்து தான் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீட்டில் நேற்று வரை மூன்றாவது முறையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த திருட்டு சம்பவத்தில் மூவர் ஈடுபட்டிருந்தமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

