விமான நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: பயணிகளுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால், ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல குறைந்த கட்டண விமான நிறுவனமான ரயான் ஏர் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ'லியரி இது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
"கடந்த மார்ச் மாதம் ஒரு பேரல் விமான எரிபொருள் (Jet A-1) 80 டொலராக இருந்தது. ஆனால், தற்போது அது 150 டொலராக உயர்ந்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வான் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 24-உடன் முடிந்த வாரத்தில் ஒரு பேரல் விமான எரிபொருளின் சராசரி விலை 179 டொலராக உயர்வடைந்துள்ளது.
வட அரைக்கோளத்தில் கோடைகால விடுமுறை பருவகாலம் தொடங்கவுள்ள நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் விலை இதே மட்டத்தில் நீடித்தால், பல ஐரோப்பிய விமான நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் அல்லது சேவையை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்று ஓ'லியரி எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை (Hedging) செய்யாத அல்லது பலவீனமான நிலையில் உள்ள நிறுவனங்கள் "உண்மையான நிதிச் சிக்கல்களை" எதிர்கொள்ளும். ஐரோப்பாவிற்குத் தேவையான எரிபொருளில் பெரும் பகுதி மத்திய கிழக்கிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போதைய போர் சூழலால் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், எதிர்வரும் கோடைகாலப் பயணங்களின் போது விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
மேலும், சில சிறிய விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்தினால், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் சூழல், உலகளாவிய எரிசக்தி சந்தையை மட்டுமன்றி, ஐரோப்பிய மக்களின் கோடைகாலப் பயணத் திட்டங்களையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.