மாற்றம் பற்றியே நான் சிந்திகின்றேன்: மலையகம் 200 விமர்சனங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன்- ஜீவன் (Photos)
புதிய இணைப்பு
விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக்கொண்டு, மற்றையவர்களை தாழ்த்திபேசி காலத்தை வீணடிப்பதைவிட, மலையக மாற்றம் பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மலையகம் 200 நிகழ்வு தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில், எதிர்வரும் 25 ஆம் திகதி விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், ஜீவன் தொண்டமானால் இன்று (18.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.
மலையகம் 200 நிகழ்வு
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிரித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,"
மலையகத்தில் வீடு கட்ட முடியாது, வீடு கட்டுவதற்கு நிதி இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றுக்கு பதிலளிப்பதற்கு நாம் செல்லவில்லை. தனிநபர்களையும் விமர்சிக்கவில்லை. மாறாக செயலில் இறங்கினோம். அதன்பலனாகவே இன்று வீடுகளை கையளிக்க முடிந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின்போது எனக்கு அமோக ஆதரவை வழங்கினர். எனவே, மக்கள் நலன்கருதி, அனைத்து மலையக கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். நல்லெண்ணத்துடன் செயற்பட்டேன். அதற்கான சிறந்த ஆரம்பத்தையும் வழங்கினேன்.
ஆனால் நேரில் ஒன்றையும், வெளியில் சென்று மற்றுமொன்றையும் பேசுபவர்கள்தான் இருக்கின்றனர். மலையகம் 200 நிகழ்வு குறித்து விமர்சனங்களை முன்வைத்து, தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களை பெறுவதற்கு மலையக சார்ந்த நபரொருவர் விண்ணப்பம் முன்வைத்துள்ளார்.
இதனை வரவேற்கின்றேன். நல்ல விடயம். ஆனால் அதே ஊடகர் ஏன் வீட்டு திட்டம் பற்றி தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் பெறவில்லை? அதிலும் அரசியல் நடக்கின்றது.
சிலர் பணத்துக்கு விலைபோய் உள்ளனர். நாம் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தவில்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எனது உரை உள்ளது.
அதன்போது நாம் 200 நிகழ்வு தொடர்பில் விளக்கமளிப்பேன். கடும் சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியிலேயே காணி உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
பழைய விடயங்களை வைத்து எனக்கு ஆதரவு வழங்க வேண்டியதில்லை. இப்போது என்ன செய்கின்றோம் என சிந்தித்து பாருங்கள், அதற்கான பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது." என்றார்.
முதலாம் இணைப்பு
நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (18.11.2023) இடம்பெற்றுள்ளது.
பிரத்தியேக முகவரி
அத்துடன், பயனாளிகளுக்கு பிரத்தியேக 'முகவரி' வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான தபால் பெட்டியும் வழங்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்துவந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
எனினும், முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளே மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு, குடிநீர், மின்சாரம், வீதி உட்பட சகல உட்கட்மைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இதன்பிரகாரம் முழுமைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் பிரதி தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ராஜதுரை, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி. சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி, உப தலைவர் பிலிப், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மக்கள் என பெருமாளனோர் பங்கேற்றிருந்தனர். அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.