ஹட்டன் பிரதேசத்தில் புதிய ஊடகமையம்: இணக்கம் தெரிவித்த ஜீவன் தொண்டமான்
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஹட்டன் பிரதேசத்தில் “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்க நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருர் ஜீவன் தொண்டமான் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்றையதினம் (22.06.2023) கொட்டகலை ஹில்கூல் விருந்தகத்தின் இடம்பெற்றது.
சுமார் 40 பேர் கலந்து கொண்ட இந்தசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நீண்ட காலத்துக்குப் பிறகு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தேர்தல் சந்திப்பு அல்ல
இது தேர்தலுக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ ஏற்படுத்தப்பட்டுள்ள சந்திப்பு அல்ல. நாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் சரியான முறையில் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்தியா செல்லும் போது நானும் அவருடன் செல்லவுள்ளேன். அப்போது மலையகத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும், மலையகம் 200 சம்பந்தமாகவும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும்.
விரைவில் இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. அதற்கு முன்னதாக ஏற்கனவே பூர்த்தி செய்யப்படாமல் உள்ள குடியிருப்புகளை முழுமையாக்கி மக்களிடம் கையளிக்கப்படும்.
மலையகத்துக்கான நகர பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க தேவையான கட்டிட வசதிகள் உள்ளன. அதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஊடக தர்மத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்
மேலும், மலையகத்தின் அபிவிருத்தி தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சகல தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி கருத்துகளை பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, அவர்களுக்கு தலா 10 – 15 பேர்ச் காணி தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளேன்.
அட்டன் பிரதேசத்தில் அவர்களுக்கான “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்க, பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்து கொடுத்தால், தேவையான உபகரண வசதிகளுடன் அமைத்துக் கொடுக்கப்படும்.
இலங்கை - இந்திய ஊடகவியலாளர்களின் பரிமாற்றத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி ஊடக வளர்ச்சிக்கும், நவீன தொழில்நுட்ப வசதிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.
எனவே, ஊடகவியலாளர்கள் தமது சமூகத்தின் நலன் கருதி ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் ஊடக தர்மத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




