6.9 மில்லியன் மக்களின் நம்பிக்கையை ராஜபக்சர்கள் அழித்துள்ளனர்: திலித் ஜயவீர குற்றச்சாட்டு
இலங்கையின் 6.9 மில்லியன் மக்களின் நம்பிக்கையை ராஜபக்சக்கள் அழித்துள்ளதாக தொழிலதிபரும்,அரசியல்வாதியுமான திலித் ஜயவீர(Dilith Jayaweera) குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பலமான ஆதரவாளராக செயற்பட்ட ஜயவீர, 6.9 மில்லியன் என்பது வெறும் எண்ணிக்கையல்ல, அது, நாட்டை நேசிப்பவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) 2019ஆம் ஆண்டில் 6.9 மில்லியன் வாக்குகளால் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுமக்களின் எதிர்ப்புகள்
எனினும், இறுதியில் 2022 ஆம் ஆண்டில் பொதுமக்களின் எதிர்ப்புகளால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தமது “சர்வஜன பலய” என்ற புதிய அரசியல் இயக்கம்,6.9 மில்லியன் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும் என்று ஜயவீர கூறியுள்ளார்.
அத்துடன், ஜயவீரவுடன் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் இன்னும் சில சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அண்மையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கினர்.
இந்த கூட்டணிக்கான உறுதிமொழியில் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி வீரசிங்க, சுதந்திரக் கட்சியின் கெவிந்து குமாரதுங்க,மௌபிம ஜனதா கட்சியின் சன்ன ஜயசுமன மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |