ஜெயகமு ஸ்ரீலங்கா அம்பாறை மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சித் திட்டம்
'ஜெயகமு ஸ்ரீலங்கா' அம்பாறை மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சித் திட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அணுசரனையுடன் நடைபெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஆரம்பமானது.
நிதியுதவி
நிகழ்ச்சித் தொடரின் முதற்கட்டமாக வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் 'புலம்பெயர்ந்த தொழிலாளர் போக்குவரத்துத் திட்டம்' நடைபெற்றது.
மேலும் சுயதொழில் மேம்பாட்டிற்கான மானியத்தின் முதற்கட்டமாக 19 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 08 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி, புலம்பெயர்ந்த தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 240 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்தொகை , 520 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரண பைகள், 100 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சதொச வவுச்சர்கள், பரிந்துரையின் அடிப்படையில் 20 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் (Smart Board) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ், மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.ஜி.எச்.என்.ஆர். கிரியெல்ல, மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.