நிமல் சிறிபால டி சில்வா இலஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு! ஜப்பானிய நிறுவனம் மறுப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விஸ்தரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிறுவனத்திடம், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, ஜப்பானிய நிறுவனம் மறுத்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுமத்திய குற்றச்சாட்டில் ஆதாரமற்றது என ஜப்பானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
570 மில்லியன் டொலர் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன், கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாணப் பணிகள் தொடர்பான விடயத்திலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனையடுத்து விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியான தகவல் |
ஜப்பானிய அரசாங்கத்தின் ஈடுபாடு இல்லை
ஜப்பானின் Taisei Corporation நிறுவன பொது முகாமையாளர் Maskato Sato இது தொடர்பில் தெரிவிக்கையில், நிறுவனத்திடம் இலஞ்சம் எதுவும் கேட்காத அமைச்சர் டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு முதலீட்டாளராக JICA நிதியுதவி அளித்து வருவதாகவும், இந்த முயற்சியில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஈடுபாடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆதாரமற்ற சமூக ஊடக அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை சேதப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.