எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் எடுத்துள்ள பாரிய நடவடிக்கை
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சீர்செய்ய ஜப்பானிய அரசாங்கம் தனது தேசிய கையிருப்பில் உள்ள மசகு எண்ணெயை (Crude Oil) சந்தைக்கு விடுவிக்க தொடங்கியுள்ளது.
30 நாட்களுக்குத் தேவையான உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய சுமார் 8.5 மில்லியன் கிலோ லீற்றர் எண்ணெய் விடுவிக்கப்படுகிறது.
தனியார் துறை மற்றும் அரசாங்க இருப்பு
தனியார் துறை மற்றும் அரசாங்க இருப்புகள் உட்பட மொத்தம் 80 மில்லியன் பீப்பாய்கள் (45 நாட்களுக்கான நுகர்வு) சந்தைக்கு வரும். இது 2011 சுனாமி காலத்தை விட 1.8 மடங்கு அதிகம்.

ஜப்பான் தனது மசகு எண்ணெய் இறக்குமதியில் 90% இற்கும் அதிகமான தேவையை மத்திய கிழக்கையே நம்பியுள்ளது. தற்போது ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் இந்த விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எஹிமே (Ehime) மாகாணத்தில் உள்ள கிகுமா (Kikuma) தளத்திலிருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாதனை அளவை எட்டியுள்ள பெட்ரோல் விலை
மார்ச் மாத இறுதிக்குள் மேலும் 8 தளங்களிலிருந்தும், ஏப்ரல் தொடக்கத்தில் நாகசாகி மற்றும் ககோஷிமா தளங்களிலிருந்தும் எண்ணெய் விடுவிக்கப்படும். சுமார் 540 பில்லியன் யென் ($3.4 பில்லியன்) மதிப்பிலான இந்த எண்ணெய், 'எனியோஸ்' (Eneos) உட்பட நான்கு பெரிய மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஜப்பானில் பெட்ரோல் விலை லீற்றருக்கு 190.80 யென் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதனைத் தணிக்க அரசாங்கம் மானியங்களை வழங்கி வருகிறது.
2025 இறுதியில் ஜப்பானிடம் 254 நாட்களுக்குத் தேவையான (சுமார் 470 மில்லியன் பீப்பாய்கள்) எண்ணெய் இருப்பு இருந்தது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைகள் தயாரிக்கப் பயன்படும் நெப்தா (Naphtha) விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.