இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு ஆதரவாக செயற்படும் ஜப்பான்
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் கடனாளிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக செப்டெம்பர் மாத இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்திருந்தார்.
இதன்போது பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இதற்கான உதவியை கோரியதாக ஜப்பானிய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடனாளிகளின் கூட்டம்
இந்தநிலையில் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்த கூட்டத்தில் கடன்
செலுத்துதல்களை குறைப்பது மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை
ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிக்கலை கையாள்வதில் ஒரு செயலூக்கமான பங்கை வகிக்க மற்ற கடன் வழங்கும் நாடுகளை ஜப்பான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
திவாலான நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைத் திருப்பி செலுத்துவதை நிறுத்துவதற்கான அவசர நடவடிக்கையை அறிவித்தது.
கடன் வழங்குநர்களின் தரவரிசை
இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு கடன் 46.6 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70வீதமாகும்.
இலங்கையில் 20க்கும் மேற்பட்ட கடன் வழங்குநர்கள் உள்ளனர், சீனா 7.3 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.