சவூதி அரேபிய அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட இலங்கையின் முக்கிய பதவியில் உள்ள அதிகாரி
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், சவூதி அரேபிய அதிகாரிகளினால் விசாரணையொன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்களின் நூல்கள் மற்றும் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனப் போலி அறிக்கை சமர்ப்பித்து, அவற்றை கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கக் காரணமாக இருந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கா அல்-முகர்ரமாவின் 'சிலோன் ஹவுஸ் வக்ஃப்' ஷரியா மேற்பார்வையாளர் முஹம்மது பின் ரியால் (சாதிக் ஹாஜியார்) என்பவரால் சவூதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்களில் தீவிரவாதக் கருத்துக்கள் காணப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து பரிந்துரைக்க, பாதுகாப்பு அமைச்சினால் ஓர் உத்தியோகபூர்வக் குழு நியமிக்கப்பட்டது.
போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை
பிரதான சூத்திரதாரி
இக்குழுவில் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்தும் பாதுகாப்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் இஸ்லாமிய நூல்கள் மீளாய்வு குழு உறுப்பினர் என்ற வகையில் சவூதி அரேபியாவில் இருந்து தருவிக்கப்பட்ட சில நூல்களும் தர்ஜுமதுல் குர்ஆன் பிரதிகளும் இலங்கை சுங்கத்தினால் விடுவிக்கப்படாமைக்கு அவரே பிரதான சூத்திரதாரி என்று சாதிக் ஹாஜியார் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்துக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தற்போது புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காகவும் குறிப்பிட்ட ஒரு தனியார் ஹஜ் முகவர் குழுவின் வழிகாட்டியாகவும் புனித மக்கமா நகர் சென்றுள்ள நிலையில் மினா மைதானத்தில் இருந்து சவூதி அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
எனினும் அவரின் கடவுச்சீட்டு இன்னமும் சவூதி அதிகாரிகளிடமே உள்ளது. அவர் சுதந்திரமாக நடமாடினாலும், கடவுச்சீட்டு கையில் ஒப்படைக்கப்படாத வரை அவர் ஒரு குற்றவாளியைப் போன்ற தோற்றப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது அவர் இலங்கைக்குத் திரும்புவதிலும் பாரிய சிக்கலைத் தோற்றுவிக்கும். பாதுகாப்புத் துறையின் வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பணியாற்றிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது, அரசாங்கம் மௌனம் காக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள முஸ்லிம் சமூகப் பிரமுகர்கள், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் பாதுகாப்பாக நாடு திரும்ப அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்னர்.