யாழ். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம்..! அநுர உறுதி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம் மீது நம்பிக்கை வைத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றிகொள்ள வைத்துள்ளீர்கள். நீங்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம் என யாழ்ப்பாணம் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசின் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோயில் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வடக்கு மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையைப் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் இனவாத மோதல்கள் மற்றும் இனவாத போக்குகள் இடம்பெற்றன. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை.
எங்கு பிறந்தாலும் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் எத்தகைய கலாசாரச் சூழலில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் எமது நாட்டில் கௌரவமான பிரஜையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே எமது அபிலாஷையாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம் மீது நம்பிக்கை வைத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றிகொள்ள வைத்துள்ளீர்கள். நீங்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம்.
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். அனைவருக்கும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம்.
இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




