யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி விவகாரம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்.பல்கலைக்கழகத்தின் உள்ளே காணப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி கடந்த 2021/01/8 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்ட வேளை, பல்கலை மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்கள் என அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய இராசரத்தினம் தர்ஷன் மற்றும் பாலசிங்கம் யுகந்தன் ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாணவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து 09/01/2021 யாழ்ப்பாணம் நீதிவான் நீதமன்ற நீதிபதி பீற்றர்போல் அவர்களினுடைய வாசஸ்தலத்தில் மாணவர்கள் முறபடுத்தப்பட்டபோது மாணவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையான நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் நீதிவான் 50000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு இடம்பெற்றுவந்த நிலையில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் சட்டத்தரணி பு.பானுப்பிரியன் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.ஜனகன், மாணவர்களை தாண்டியும், பல்கலைக்கழகம் சாராத சட்டத்தரணி அரசியல்வாதி மற்றும் பல்கலைக்கழகம் சாராத ஒருவர் உட்பட பல்கலைக்கழகத்திற்கு உட்சென்றவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும், இரண்டு மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நீதிமன்றுக்கு எடுத்துரைக்கப்பட்ட நிலையில், நீதிபதியால் மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



