யாழ்.பல்கலை - கிளிநொச்சி வளாக கட்டிடங்கள் நிர்மாணிக்கும் திட்டம்
யாழ்.பல்கலைகழக மற்றும் கிளிநொச்சி வளாக கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகுக்கான கட்டிடத்தின் 4 ஆவது மற்றும் 5 ஆவது மாடிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்ம தொழிநுட்பம் கட்டிடத்தின் ii ஆம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலை உட்கட்டமைப்பு வசதிகள்
களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்தல் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டபக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்,கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 17 மாடிகளுடன் கூடிய உத்தேச கட்டிடத்தொகுதியின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல் வயம்ப பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிலையத்திற்கான உத்தேச கட்டிடத்தை நிர்மாணித்தல் ஆகியன இதில் அடங்கும் திட்டங்களாகும்.