யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து! தொடரும் விசாரணைகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்தது.
குறித்த சம்பவம் கடந்த மாதம் 30ஆம் திகதி அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியிருந்தது.
இந்த நிலையில் மூன்று கோடி ரூபா பெறுமதியான பேருந்துக்கான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காகவே உரிமையாளரால் திட்டமிட்டு பேருந்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
தீப்பிடித்த பேருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் மதுரங்குளிக்கு வந்ததாகவும், புத்தளத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்திய போது அதில் எவ்வித தொழிநுட்ப கோளாறுகளும் காணப்படவில்லை என பேருந்தில் பயணித்த பலர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
போலி செய்திகள் வெளியானதாக குற்றச்சாட்டு
இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக விபத்தில் எரிந்த பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனவே குறித்த விடயம் தொடர்பான உண்மை தகவல்களை அறிய எமது செய்திப் பிரிவு மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி விக்ரமசிங்கவை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விபத்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கவில்லை எனவும், காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை தமக்கு தெரியும் எனவும், எனினும் அந்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் விசாரணை
இதேவேளை எமது செய்திப் பிரிவு இரசாயன பகுப்பாய்வு பிரிவினை தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் வினவிய போது, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதால் இது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியாதெனவும் கூறியிருந்தனர்.
பேருந்து திடீரென தீப்பற்றியமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |