யாழ். முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள் யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தும் நடவடிக்கை முடிவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இன்று (04.07.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்பொழுதுள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கட்டணமானி பொருத்தும் நடவடிக்கை
அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்” என செயலாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16, 17, மற்றும் 18 ஆம் திகதிகளில் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் தற்போது முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தும் நடவடிக்கை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |