5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் மக்கள் ஏமாற்றம்
யாழ். மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்றைய தினம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சங்கானைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்கள், குறித்த கொடுப்பனவைப் பெறுவதற்கு, தமது பிரிவிலுள்ள கிராம சேவகர் அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர்.
எனினும் கொடுப்பனவுக்கான பணத்ததொகை எதுவும் தமக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனவும், கொடுப்பனவிற்கான பணத்தொகை தங்களுக்கு அனுப்பப்பட்டால் தாமே வீடு வீடாக சென்று அதனை வழங்குவோம் எனவும் கூறி உத்தியோகத்தர்கள் அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு முதல் கொடுத்த 5,000 ரூபா கொடுப்பனவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், அதுபோல இந்தக் கொடுப்பனவும் கிடைக்குமா இல்லையா என்ற ஐயம் உள்ளதாகவும் தெரிவித்த மக்கள் இன்று தாம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலரை எமது செய்தியாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது, கொடுப்பனவானது மதியத்திற்கு பின்னர் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.