யாழ். போதனா வைத்தியசாலையில் அடாவடியில் ஈடுபடுபட்டோர் : நடவடிக்கை எடுக்க டக்ளஸ் வலியுறுத்து
யாழ். (Jaffna) போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) குறிப்பிட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இன்றையதினம் (30.05.2024) நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், வைத்தியசாலையின் பாதுகாப்பில் பொலிஸாரின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உரிய நடவடிக்கை
அதேவேளை, பொதுமக்களும் வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் அக்கறை கொள்வதுடன் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இனி வருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என அவர் உரிய தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி (Sathyamurthy),
"வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5000இற்கும் அதிகமானவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு.
அதுமட்டுமல்லாது, இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகை தருவதால் உயிர் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை.
அவசர நோயாளர் பிரிவு
எனவே, அந்த இணக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாக ஒருசிலர் பயன்படுத்துவதால் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அதேநேரம், இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைமுறையை கொண்டுவரவும் முடியாது.
அந்தவகையில், வைத்தியசாலையின் பாதுகாப்பு அதன் மகிமைகள் குறித்து இளைஞர்கள் அதிக கரிசனை காட்டுவதனூடாகவே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தலாம்.
மேலும், இதற்கு அனைவரதும், குறிப்பாக இளைஞர்களது ஒத்துழைப்பும் அவசியம்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |