கோமாளிக் கூத்தாடும் அநுர தரப்பு தமிழ் எம்.பிக்கள்
ஆளும் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில செயற்பாடுகள் பொது வெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமகால செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் பொதுவெளியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்ற போக்கு காணப்படுகின்றது.
இவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் ஆளும் கட்சியை விமர்சிக்க சிறந்த வாய்ப்பாக மாறிவிடுகின்றது.
கேலிக் கிண்டல்கள்
இவ்வாறான நிலையில், அண்மையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிறிய நீர்க்குழாய் ஒன்றுக்கு திறப்பு விழா நடத்தியிருக்கின்றார். அந்த நீர்க்குழாயை நாடா வெட்டி இளங்குமரன் எம்.பி திறந்து வைத்த விடயம் அரசியல் பரப்பில் கேலிக் கிண்டல்களுக்கு வழி வகுத்தது.
அது மாத்திரம் அல்லாமல் நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர், இளங்குமரன் எம்.பியின் நீர்க் குழாய் திறப்பு விழாவை கிண்டலடித்தனர்.
மேலும், கடந்த சில நாட்களாக அரசியல் மேடைகளில் பல அரசியல்வாதிகள் இது தொடர்பில் ஆளும் கட்சியை கேலி செய்து வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க, அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்கான நிகழ்வொன்றில், அமைச்சர் சந்திரசேகர் சைக்கிள் ரயரை மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.
இதுவும் தற்போது சமூக வலைத்தளங்களில் கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்களுக்கு உள்ளாகி வருகின்றது.
இதை தவிர்த்து, மலையகத்தைப் பொறுத்தவரை கடந்த கால அரசியல்வாதிகள் பொதுமக்களிடத்தில் சென்று ஆதரவு கோரும் பொருட்டு, அங்குள்ள கோவில்களுக்கு தகரம் வழங்குதல், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
அதையே மிகப்பெரிய சேவையாக காட்டி வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்ட அரசியல்வாதிகளும் உண்டு.
இருப்பினும் மாற்றத்தை நாடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தால், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களும் தகரம் வழங்கும் மாபெரும் அபிவிருத்தித் திட்டத்திலேயே தேங்கி நிற்கின்றனர்.
ஆளும் கட்சியின் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்ணன் செல்வராஜ் எம்.பியும் தகரம் வழங்கும் உன்னத சேவையில் இணைந்து கொண்டதை நினைத்து மலையக சமூகம் பெருமைக் கொள்கிறது.. 🥱
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 20 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




