யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நவீன வசதிகளுடன் புதிய விளையாட்டு திடல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் புதிய விளையாட்டு திடல் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விளையாட்டு திடல் நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் சம்பிரதாயபூர்வமாக இன்று கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த விளையாட்டுத்திடலானது வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலத்திரனியல் ஸ்கோர்போட், கழக மனை, பயிற்சிகளுக்கான இடம் போன்றன இந்த திடலில் உள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த மைதானத்தில் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.