யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்
மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள்
அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன.
அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் பார்வையிட்டனர்.
அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தகனமேடை ஒன்றினை அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினர் மயானத்தின் மேற்கு பக்கமாக கிடங்கு தோண்டியபோது மனித எலும்புகள் மீட்கப்பட்டன.
இருப்பினும் நல்லூர் பிரதேச சபையோ அல்லது குறித்த வேலை திட்டத்தினை மேற்கொண்டவர்களோ இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் எமது கட்சியின் உறுப்பினரான கிருபா அவர்கள் இந்த மயானத்தின் நிர்வாகத்தில் ஒரு உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.
அந்த வகையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம்.
பிரதேசமானது அண்ணளவாக 600 தமிழ் பொதுமக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாக சொல்லப்படுகின்றது.
கிருசாந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் தெரிவிக்கப்பட்ட தகவலில் இந்த செம்மணி சம்பவங்கள் அம்பலமாகின.
அந்த வகையில் அவர் 10 இடங்களை கூறிய நிலையில் அவற்றில் இரண்டு இடங்களில் மாத்திரமே தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏனைய இடங்களில் கணிசமான அளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்க தோன்றுகின்றது. இந்த மயானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இராணுவத்தின் முகாம் அமைக்கப்பட்டு காணப்பட்டது.
அங்கு இறந்தவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்டால் தற்போது உள்ள தகனமேடைக்கு கிழக்கு புறமாக தான் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பேணப்பட்டு வந்த ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர் தகவல்களின் அடிப்படையில் இந்த மயானத்தில் தற்போது புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் எவரும் புதைக்கப்படவில்லை.
ஆகவே இந்த மனிதப் புதைகுழி குறித்து தீவிரமாக ஆராய்வது முக்கியமான ஒன்றாகும்.
செம்மணி படுகொலைகளின் தகவல்கள் அம்பலமாகிய நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில் தான் இந்த புதைகுழியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
முதலாம் இணைப்பு
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த தகவலை சற்று முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் வழங்கியுள்ளார்.
கட்டிட பணி
கடந்த வியாழக்கிழமை (13), செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு அத்திவாரம் வெட்டும் போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, கட்டிட வேலைகளை முன்னெடுத்த நபர், இந்த விடயம் குறித்து நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கும் அறியப்படுத்தியதை அடுத்து கட்டிட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில், பொதுமக்கள் அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
