யாழில். வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல்
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.
யாழ். மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ் மக்கள் கூட்டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனு விசாரணைகள்
குறித்த வழக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமா அதிபர் அலுவலகத்தில் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இலங்கை தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுக்கும் இடையில் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அக்கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும் அவ்வாறு இணைக்கப்பாட்டுக்கு வராத மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி சபையில் யாழ்.மாநகர சபையில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி, தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேச்சை குழு உள்ளிட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டள்ள நிலையில், தமது வேட்புமனு நிராகரிப்பு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 09 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |