யாழில் வழித்தட அனுமதிக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் தனியார் சிற்றூர்தி சங்கம்
யாழ். காரைநகர் (Karainagar) தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் வழித்தட அனுமதிகள் விற்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் (02.05.2024) யாழ். ஆளுநர் (Jaffna) அலுவலகத்தை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்திற்கு பேருந்து உரிம மாற்றம் மேற்கொள்ளும் பொழுது சங்க உறுப்பினர்களுக்கிடையில் அறியப்படுத்தி வழித்தடத்தில் இருப்பவர்களுக்கிடையில் வழித்தட அனுமதி விடுக்கப்படுவது சங்கத்தின் யாப்புசார் வழமையாக இருந்து வந்துள்ளது.
கையளிக்கப்பட்ட மனு
இந்நிலையில், குறித்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் வழித்தடத்தில் அல்லாத அராலி பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வழித்தட அனுமதி பத்திரத்தினை விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பில், விற்பனை செய்வதற்கு முதலே வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியும் சபை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆளுநருக்கும் அறியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஏற்கனவே குறித்த சங்கத்தினர் காரைநகரில் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினர் நேரடியாக காரைநகரிற்கு வருகை தந்து சங்கத்துடன் எதுவித சந்திப்புக்களையும் நடத்தாது பேருந்தினை செலுத்த அனுமதியளித்துள்ளனர். இதனை கண்டித்து யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகம் முன்பாக கோஷங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாக சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஆளுநர் சார்பில் வருகை தந்த ஆளுநர் அலுவலக அதிகாரியிடம் மனு ஒன்று பேருந்து சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
வழித்தட நேர அட்டவணை
மேலும், யாழ். மாவட்ட தனியார் பேருந்து சங்கங்களின் இணையத்தின் தலைவர் இது தொடர்பில் கூறுகையில், “காரைநகர் சிற்றூர்தி சங்கம் நீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடைமுறைக்கு வரும் முன்னரே செயற்பட தொடங்கிவிட்டது.
இளவாலை சங்கம், மாதகல் சங்கம் மற்றும் காரைநகர் சங்கம் இந்த மூன்று வழித்தடத்திற்கும் அவர்களே நேர அட்டவணையை உருவாக்குகின்றார்கள்.
இதேவேளை, நேர கண்காணிப்பாளர்களையும் சங்கமே மேற்கொள்கின்றது. இந்நிலையில் முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பல்வேறு நியதிச்சட்டங்களை கொண்டு வந்தாலும் எமது சங்க நடைமுறையையும் ஏற்றே செயற்பட்டார்.
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தொடர்பில் பல விடயங்களில் எமக்கு அதிருப்தி உள்ளது. இதற்கு தீர்வு ஒன்றினை இன்று மாலைக்குள் வழங்குவதாக ஆளுநர்சார் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகவே, தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாம் அடுத்த கட்டத்தினை நோக்கி மாவட்ட ரீதியாக செயற்படவேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |