தையிட்டி போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் ஆதரவு
தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர் கழகம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விகாரை அமைக்கப்பட்டுள்ளமையினாலும், காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமையினாலும் தையிட்டி பிரதேச மக்கள் சொந்தக் காணியை இழந்துள்ளதுடன் தமது எதிர்கால சந்ததிகளின் நிம்மதியான வாழ்க்கை தொடர்பில் அடுத்தது என்ன? என்ற கேள்வியுடன் தவிக்கின்றதை நாம் காண முடிகின்றது.
பகிரங்க ஆதரவு
உண்மையில் 1990ஆம் ஆண்டு வெளியேற்றத்தின் போது சொந்த நிலங்களை விட்டுச் சென்ற வடக்கு முஸ்லிம் மக்கள் அந்த வலியை நன்கு உணர்ந்துள்ளதுடன், அனுபவித்தும் உள்ளனர்.
இந்நிலையில், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரை தொடர்பில் அரசு மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுடன், சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களாகிய நாமும் அரசை வலியுறுத்துவதோடு அந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கும்.
இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு எமது யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களாகிய நாமும் எமது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
நியாயமான கோரிக்கை
பொது மக்களின் காணிகள் அவ்வாறே மீண்டும் விடுவிக்கப்பட்டு பூர்விக காணி உரிமையாளர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட வேண்டும்.
அந்தக் காணிகளுக்காக மாற்றுக் காணிகளை வழங்குதல் என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதுடன், அது அநீதியான ஒரு செயற்பாடாகும் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, அந்த மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடன் செயற்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த விடயம் தொடர்பில் தீவிர போக்குடைய இனரீதியான கருத்துக்களை முன்வைத்து இன முரண்பாட்டை வளர்க்கும் கடும்போக்குவாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றோம் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |