யாழ்ப்பாணம் நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து (01.08.2025) இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதைச் செயற்படுத்தும் அதேநேரம் இதனால் எழக்கூடிய சவால்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மாதாந்தக் கலந்துரையாடல் நடத்தி அதற்கான தீர்வுகளைக் காண்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெடுந்தூர பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன் தினம் மாலை (21.07.2025) நடைபெற்றது.
வழக்குத் தாக்கல்
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், 17.01.2025 அன்று வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 01.02.2025 அன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தனியாரும், இலங்கை போக்குவரத்துச் சபையினரும் இணைந்த நேர அட்டவணையில் செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தால் மாகாண மேல் நீதிமன்றத்தில், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
04.07.2025 அன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் அனுப்பிய கடிதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஸ் குலதிலகவுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நெடுந்தூர பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வதற்கு ஏதுவாக வடக்கு மாகாண ஆளுநருடனும் தொடர்புடைய தரப்புக்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறும் பணித்திருந்தார் என்றார்.
இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன், இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னதாக கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஸ் குலதிலக மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தோம்.
அவர்கள், நெடுந்தூர பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு சம்மதிக்கவில்லை. வடக்கு மாகாணம் முழுவதற்குமான இணைந்த நேர அட்டவணையை தயாரித்த பின்னர், பொது இடத்திலிருந்து இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக புறப்படத் தயாராக உள்ளபோதும், தற்போதுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தைவிட்டு நகர்வதற்கு தயாரில்லை.
மறுப்பு
நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இணைந்த சேவையை மேற்கொள்வதற்கு எமது தொழிலாளர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். அவர்களை மீறி எம்மால் செயற்பட முடியாது என்று குறிப்பிட்டார். வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.சிவபரன், மன்னாரிலும், வவுனியாவிலும் இவ்வாறுதான் இணைந்து செயற்பட இலங்கை போக்குவரத்துச் சபை மறுத்தது. ஆனால் இன்று அங்கிருந்து இணைந்துதான் செயற்படுகின்றோம்.
யாழ். நகரத்தின் போக்குவரத்து நெரிசல், நகரத்தின் நீண்டகால அபிவிருத்தி ஆகியவற்றை கருத்திலெடுத்தே முடிவு எடுக்கவேண்டும். ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டு இவ்வாறு நடந்த பல கூட்டங்களை இலங்கை போக்குவரத்துச் சபைதான் குழப்பியிருக்கின்றது. எங்களைப்பொறுத்தவரையில் மக்களுக்கான சேவை அதன் பின்னரே எமக்கான வருமானம் என்று செயற்படுகின்றோம்.
மக்களின் நலன்கருதி இரு தரப்பும் இணைந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து செயற்படுவதையே விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் திருமதி ஜே.சுரேந்தி, நெடுந்தூர பேருந்து நிலையம் அமைக்கப்படும்போது இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகிய இரண்டு தரப்புக்களினதும் இணக்கம் பெறப்பட்டே அது அமைக்கப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பி.ஜெயராஜ், இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் 2021ஆம் ஆண்டு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகிய இணங்கியுள்ளன என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
இதன்போது யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பி.கெங்காதரன், 2013ஆம் ஆண்டு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெடுந்தூர பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போதுள்ள பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் அன்று இணக்கம் தெரிவித்து கையெழுத்திட்டிருந்தார் என்றும், இப்போது அதை வரவுப் பதிவேட்டில் கையெழுத்திட்டதாகக் கூறிவருகின்றார் எனவும் குறிப்பிட்டார்.
அதேநேரம், யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தின் தலைவர் இ.ஜெயசேகரன், 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு இந்தப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வரையிலான காலத்தில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அப்போது நெடுந்தூர பேருந்து நிலையத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபையால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
வருமான இழப்பு
இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை போக்குவரத்துச் சபையினர் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து செயற்படுவதால் அவர்களுக்கு எந்தவொரு வருமான இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதேநேரம் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. அது தற்போதும் பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச காணியாகும்.
இவ்வாறு இருக்கத்தக்கதாக, சட்டவிரோதமாக அங்கு கடைகள் அமைத்து அதன் வாடகைப் பணம் இலங்கை போக்குவரத்துச் சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இது முறையற்ற நடவடிக்கை. நாம் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படாத சமூகமாக இருக்க விரும்புகின்றோமா? தொழிற்சங்கங்களை வழிப்படுத்துவதுடன் மக்களுக்கு சரியான சேவையை செய்வதற்கு வழிகாட்டுவதுதான் தலைமைக்கு அழகு என்றும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள கடைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்குள்ள சகலரும் அறிவார்கள். இரவு நேரங்களில் அந்தக் கடைகளைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் இங்குள்ள அதிகாரிகள் பலருக்கும் முறைப்பாடுகள் கிடைத்திருக்கும்.
அதேநேரம், கூட்டம் நடத்துவது என்பது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கே தவிர, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை இங்கு வந்து ஒப்புவிப்பதற்கல்ல. இணைந்த நேர அட்டவணையில் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இரு தரப்பும் செயற்பட வேண்டும். உள்ளூர் சேவைகள் தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து இரு தரப்பும் செயற்படுத்தலாம். இதேநேரம், இதனைக் கண்காணிக்க அனைத்து பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தலாம் எனத் தெரிவித்தார்.
மத்திய பேருந்து நிலைய கடைகள்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பிரதிநிதி எஸ்.ஸ்ரீவாகீசன், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்றே அறிய முடிகின்றது. அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் சிலருக்கு அருகில் பெரிய கடைகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும், இரு தரப்பும் இணைந்து பேருந்துச் சேவையை நடத்துவதே மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நெடுந்தூர பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறு வகைகளிலும் நன்மை. அதேநேரம், இலங்கை போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம்.
எதையும் செய்யாமல் குறைகூறிக்கொண்டு குழப்பிக்கொண்டிருப்பதைவிடுத்து செயற்படுத்திப்பார்ப்போம், என்றார். இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன், வவுனியாவில் இணைந்த சேவையை முன்னெடுப்பதில் தாங்கள் பல சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அங்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கும், தனியாருக்கும் பேருந்து நிலையத்தில் தனித்தனியாக இடம் வழங்குமாறு நீதிமன்றம் பணித்தும் அது மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலும், இதனைச் செயற்படுத்துவது யார் என்ற கேள்வியை எழுப்பினார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வவுனியாவையும் யாழ்ப்பாணத்தையும் ஒப்பிட வேண்டாம். வவுனியா பல பேருந்துச் சேவைக்கான நுழைவாயில். யாழ்ப்பாணம் இறுதிப்புள்ளி. எனவே இரண்டையும் ஒப்பிட்டுக் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வவுனியாவில் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதற்காக யாழ்ப்பாணத்திலும் அவ்வாறு இருக்கும் எனச் சொல்ல வேண்டாம். யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளருக்கு சுட்டிக்காட்டினார்.
தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல், இந்தக் கலந்துரையாடல் ஆகியனவற்றில் ஆராயப்பட்ட விடயங்களை விடயதானத்துக்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஸ் குலதிலக தெரிவித்தார். நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கான சேவைகளையும், தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூருக்கான சேவைகளையும் இரு தரப்பும் இணைந்து இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து முன்னெடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இறுதியாகத் தெரிவித்தார்.




