யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
யாழில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
3 வருடங்களில் சர்வதேச போட்டிகள்
வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தைத் தொடங்கவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, தீவு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
குறித்த மைதானத்தில் எதிர்வரும் 3 வருடங்களில் சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














