'இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்' பெயர்ப்பலகை திறப்பும் மாபெரும் பொங்கல் நிகழ்வு (Photos)
ஈழத்தமிழர்களின் கலாச்சார நகரான யாழ்ப்பாணம் பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் ஒன்றான, தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள கிங்ஸ்ரன் (Kingston Upon Themes) நகரத்துடன் இணைக்கப்பட்டதை வெளிப்படுத்தும் அறிவிப்புப்பலகை உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, தமிழ்க் கலாச்சார மாதமாக ஜனவரியை கொண்டாடும் மாபெரும் பொங்கல் நிகழ்வும் நேற்று (22 ஜனவரி) லண்டனில் இடம்பெற்றது.
தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளையும் பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியது.
அதன் பிரகாரம், பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய நாடாளுமன்றம் உட்படப் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC), மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) மற்றும் தமிழ் பாடசாலைகள் இணைந்து நடாத்திய மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் கலாச்சார பேரணியும் பொங்கல் விழாவும் லண்டன் கிங்ஸ்ரன் பகுதியில் உள்ள நகரமான நியூமோல்டனில் (New Malden) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப பிரதான நிகழ்வாக கிங்ஸ்டன் நகரப் பெயர்ப்பலகையில் யாழ்ப்பாண நகரத்தின் பெயரும் இணைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
இரு நகரங்கள் இணைவுத்திட்ட அடிப்படையில் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இலங்கையின் யாழ்ப்பாண நகரைக் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இரட்டையராக ஏற்றுக்கொண்டது.
இதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய வட மாகாண முதலமைச்சராக இருந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே லண்டன் கிங்ஸ்ரன் நகரப் பெயர்ப் பலகையுடன் யாழ்ப்பாணத்தின் பெயரையும் இணைத்து Kingston Twinned With Jaffna என்ற பெயர் இன்று உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழர்களின் மங்கள வாத்தியங்களான தவில் நாதஸ்வரம் மற்றும் பறை வாத்திய இசைகள் முழங்கள் வண்ண நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியத் தாராளவாத ஜனநாயக கட்சித் தலைவரும் (Liberal Democratic) நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சேர் எட் டேவி (Rt. Hon. Sir. Davey) அவர்கள் குறித்த பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். கிங்ஸ்டன் நகரபிதா உட்படப் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்த கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தமிழரின் வீர முரசான பறை இசை முழங்க, தமிழர் பாரம்பரிய கலைகளான குதிரையாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், கும்மி, காவடி, கரகம், சிலம்பம் என்பவற்றின் வண்ண அணிவகுப்புடன் பொங்கல் நடைபெற்ற சதுக்கம் நோக்கி கலாச்சார பேரணி மிகச்சிறப்பாகப் பிரதான வீதி வழியாக நகர்ந்து சென்றது.
அங்கு பொங்கல் விழாவும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடாத்திக்காண்பிக்கப்பட்டன. குறிப்பாக, அருகிவரும் தமிழர் வீரக்கலைகளான கம்பு, சிலம்பாட்டம், களரி, அடிமுறை உட்பட்ட மிக அரிய தமிழர் வீரக்கலைகள் செய்து காண்பிக்கப்பட்டன. பனை உற்பத்திப்பொருட்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய வரலாற்று நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அனைவருக்கும் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றன. தொடர்ந்து, அருகில் உள்ள மண்டபத்தில் தமிழர் வரலாறு பற்றிய கண்காட்சி இடம்பெற்றது.
அரிய புகைப்படங்கள், தமிழர் பாவனை பொருட்கள், இசைக்கருவிகள், பாரம்பரிய உணவுகள் எனப் பல பொருட்கள் காண்பிக்கப்பட்டன.
அத்துடன், கிராமிய நடனங்கள், நாட்டுக் கூத்து மற்றும் உடுக்கு கச்சேரி உட்பட்ட பல உள்ளக நிகழ்வுகளும் இடம்பெற்றன. கடும் குளிர் மற்றும் கோவிட் அச்சத்தின் மத்தியிலும் பலநூற்றுக்கணக்கில் மக்கள் பெருவெள்ளமாகத் திரண்டு கண்டுகளித்தனர்.
ஐபிசி தமிழ் (IBC Tamil), மெய் வெளி மற்றும் நமது ஈழநாடு ஆகிய ஊடகங்களின் ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இந்த விழா அவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.