யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு சங்கம் அமைக்க மாவட்ட செயலாளர் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாவட்ட ரீதியாக தமக்குள் சங்கமொன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நேற்று (09.06.2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தனியார் கல்வி நிலையங்கள்
யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாவட்ட ரீதியாக தமக்குள் சங்கமொன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.
குறித்த குழுவில் சம்பந்தப்பட்ட துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கும்போது தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டிய தேவை உண்டு.
அந்த வகையில் தனியார் கல்வி நிலையங்கள் ஒரு கூட்டாக சங்கமாக பதிவு செய்து செயல்படும் போது அதனை மேற்கொள்ள எமக்கு இலகுவாக இருக்கும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும்.
தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கண்காணிக்கப்படும்.
தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |