யாழில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்
யாழ்ப்பாணத்தில் மேலதிக கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்குக் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கோவிட்-19 நிலைமை சற்று குறைவடைந்து சென்று கடந்த வாரங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் திடீரென தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
நேற்று முன்தினம் 200 ஆகக் காணப்பட்ட தொற்று உறுதியானோர் எண்ணிக்கை நேற்றைய தினம் 206 ஆக அதிகரித்திருக்கின்றது. நான்கு பேர் அச்சுவேலி சந்தை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பேருந்து நடத்துநரின் மனைவி, பிள்ளைக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.
இந்த நிலைமையில் யாழ்.மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய கால கட்டமாக இருக்கின்றது. தற்பொழுது யாழ்.மாவட்டத்தில் அனைத்து செயற்பாடுகளும் இயல்பு நிலைமைக்குக் கொண்டு வந்து சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு ஏற்கனவே தளர்த்தி இருக்கின்றோம்.
சகல நடவடிக்கைகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதோடு இறுக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வழமையான செயற்பாடுகளைப் பின்பற்றுவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இந்த நிலைமையில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. நேற்றைய தினம் அச்சுவேலிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அச்சுவேலி சந்தையில் எழு மாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அச்சுவேலிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளி மாவட்டத்திலுள்ள சந்தையுடன் தொடர்புபட்டதன் காரணமாகவே தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அத்தோடு குறித்த அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் அந்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
பொதுமக்கள் இனிவரும் நாட்களில் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும். தற்போதைய நிலைமையானது மேலதிக கொத்தணி உருவாகும் ஒரு நிலைமையினை ஏற்படுத்தி இருக்கிறது.எனவே மீண்டும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அபாய நிலைமை ஏற்படும்.
எனவே பொதுமக்கள் இதனை அனுசரித்துச் செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்தோடு தற்போது அனைத்து செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலைகள், மதத் தலங்கள், ஏனைய பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு தற்பொழுது க.பொ.த பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்குச் செல்வோர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முச்சக்கரவண்டி சாரதிகள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
எனினும் தற்போதுள்ள நிலையில் அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் குறித்த தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இன்றையதினம் அச்சுவேலி சந்தையுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே சந்தை மூடுவதற்குரிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
