மக்களின் காணிகளை விடுவிக்க துரிதப்படுத்தும் நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடை நிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன் தினம்(27.03.2026) இடம்பெற்றுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்
இதன்போது விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை அமைப்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்த தீர்மானத்தை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் வழிமொழிந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த தீர்மானத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
காணி விடுவிப்பு
இந்நிலையில், தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ் மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அது தொடர்பாக எமது அரசாங்கத்தாலும் கூட நாம் வாக்குறுதி அளித்தோம்.
தையிட்டி விகாரை பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்பட வேண்டும். அதனை அண்டியிருக்கின்ற அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதிலும் கூட அதில் நூற்றுக்கு 80 வீதமான செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளோம்.

அந்த காணி உரிமையாளர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த காணிகளை அளவிட்டு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் பௌத்த சாசன அமைச்சர் சுனில் சனவி தலைமையிலான குழுவில் நானும் இருக்கிறேன். அந்த குழுவில் நீதி அமைச்சர் ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ,தெல்லிப்பழை பிரதேச செயலாளர்,அது சார்ந்த அனைத்து அதிகாரிகளும் , விகாராதிபதியும் அதில் இருக்கிறார்கள்.
அனைவருடனும் இணைந்து சுமுகமான முடிவை கொண்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.
இராணுவம் முகாமை அழிக்க திட்டம்
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் பலாலி கிழக்கு பக்கம் பிரதேசம் முழுவதையும் முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனை தீர்ந்து எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருவாரியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

அந்த வகையில் வலி வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அது சம்பந்தமாக பேசுவதற்கும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுக்கும் அதை நிறுத்துவதா?
அதைக் கட்டி மக்களிடம் எதிர்காலத்தில் கையளிப்பது என்பது தொடர்பாக பேச வேண்டும். குறித்த நில உரிமையாளர்களுடம் நாம் பேச வேண்டும் என்றார்.