யாழ். கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பம் (photo)
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என யாழ். புகையிரத நிலையப் பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். புகையிரத நிலையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாளை 17ஆம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கு இரவு நகர்சேர் கடுகதி புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
புகையிரத சேவை
இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட, பொல்காவலை, குருநாகல், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை அதிகாலை 5.25 மணிக்கு வந்தடைந்து அங்கிருந்து அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு காங்கேசன்துறையைச் சென்றடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கம்பஹா, மருதானை, கொழும்பைச் சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஊடாக தெஹிவளையைச் சென்றடையவுள்ளது.
நகர்சேர் கடுகதிக்குரிய ஒரு வழிக் கட்டணமாக 2 ஆயிரத்து 800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம்"என்றார்.






