இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவைகள்
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் இன்று காலை 10.50 மணிக்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வந்தடையவுள்ளது.
2019 ஆம் ஆண்டு சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
அலையன்ஸ் எயார் விமான சேவை
சென்னை விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இன்று (12) முற்பகல் 10:50 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடையும் என்றும் திங்கள், செவ்வாய்கிழமை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் சுங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக 14 பேர் கொண்ட சுங்க ஊழியர்கள் கொழும்பில் இருந்து நேற்று புறப்பட்டதாகவும் பிரதி சுங்கப்பணிப்பாளர் டி.ஏ.எம்.ஆர். சாகர கூறியுள்ளார்.