யாழ்ப்பாணத்தில் நாளை முதல் அமுலாகும் புதிய நடைமுறை
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து நாளை முதல் அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும் என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழில் புதிதாக நிர்மாணிக்க ப்பட்ட நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து தற்சமயம் இரவு நேர யாழ் - கொழும்பு பேரூந்து வேவைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் யாழ். நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இப்பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்து சேவைகளை ஆரம்பிக்க மாநகர முதல்வரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு தடைகளால் தாமதம் அடைந்தன.
வெளியூர் பயணிகள் பேரூந்துச் சேவை
இந்நிலையில் மீண்டும் மாநகர முதல்வர் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முதற் கட்டமாக அனைத்து தனியார் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் பேரூந்துச் சேவையினை நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பிப்பது தொடர்பில்இன்று ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்களின் தலைவர்கள் அதன் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சங்கத்தினர் இணக்கம்
இதன்போது யாழ். நகரின் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற்கு கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது அனைத்துச் சேவைகளையும் முன்னெடுக்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளை முதல் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் என யாழ்ப்பாணம் மாவட்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து சிற்றூர்தி மற்றும் தனியார் பேருந்துகளும் நாளை காலை முதல் தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து சேவையினை செயற்படுத்தவுள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு வினயமாக தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்




