வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தனிநடிப்பு போட்டியில் யா/ நடேஸ்வராக்கல்லூரி முதலிடம்(Photos)
வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது.
குறித்த போட்டிக்கான இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் கடந்த 10.01.202 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
‘பேரிடரை வெல்வோம்’ என்ற தலைப்பில் வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற இந்த நாடகப் போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரியின் மாணவி வானுப்பிரியா சிவசுப்பிரமணியம் முதலாவதிடத்தைப் பெற்று ரூபா 25000 பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது இடத்தினை பருத்தித்துறை யா/வட இந்து கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த றிச்சட் சீன் சாமுவேல் பெற்றுக்கொண்டு பதினையாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
மூன்றாம் இடத்தை யா/ திருக்குடும்ப கன்னியர் தேசியப் பாடசாலையைச் சேர்ந்த டனோஜா எட்வின் பெற்றுக்கொண்டதோடு பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் சிறந்த ஆற்றுகைகளாக முல்லைத்தீவு றோ.க.த.பெ பாடசாலை மாணவன் தக்சயன் உதயகுமார் மற்றும் பருத்தித்துறை செ.தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த திவ்யா பாலசுப்பிரமணியம் ஆகியோரின் தனிநடிப்பு ஆற்றுகை தேர்வாகியிருந்தன.
இந்தத் தனி நடிப்பு பரிசளிப்பு விழாவில் வலிகாமம் கல்வி வலையத்தின் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்ததோடு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தனர்.
மேலும் அவர் தனது கருத்துரையில் தெரிவிக்கையில்,
“கலை மனிதனோடு இரண்டறக்கலந்தது. கிராமங்களில் அது உயிர் நாடியாக இருந்தது. முன்னர் கலையூடாகத்தான் அறிவு பகிரப்பட்டது. நாடகம் மனித ஆற்றுப்படுத்தலின் முக்கியமானது. செயல் மூலம் வெளிப்படுத்துவதால் மனதில் பதிகிறது. இன்று நாடகத்துறைக்கான உற்சாகப்படுத்தல்களும் ஊக்கப்படுத்தலும் இல்லை. நாடக மேடையேற்றங்கள் நடைபெறுவதில்லை.
பலர் ஒன்று கூடிச் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்தச் சூழலில் தனியொருவராக நடிக்கின்ற நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இது மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. தனியொருவராகச் சிறப்பாகச் செய்கின்ற மாணவர்களைப்பார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டார்.
செயல் திறன் அரங்க இயக்கத்தின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண அழகியற் கற்கைகள்
உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.சிவசிவா காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர்
ம.மகேந்திரன் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் அ.ஜெகதீஸ்வரன் மற்றும்
விஜயரத்தினம் பிறேமதாஸ் குமாரசிறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறை
முதுநிலை விரிவுரையாளர் காலநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் ஆகியோர் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டார்.





