தமிழரசுக் கட்சியை கொழும்பு நலன்சார் அரசியலுக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பவர் சிறீதரனே - சி.அ.யோதிலிங்கம்
தமிழரசுக் கட்சியை கொழும்பு நலன்சார் அரசியலுக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பவர் சிறீதரனே என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில், "தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளைப் பெற்றவருமான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானத்தினாலும், பதில் செயலாளர் சுமந்திரனினாலும், நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை இருவரும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளனர்.
எடுக்கப்பட்ட தீர்மானம்
இது கட்சி அரசியல் குழுவின் தீர்மானம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் குழு தீர்மானம் என்றால் ஒருவர் முன்மொழிந்து இன்னொருவர் வழிமொழிந்திருக்க வேண்டும்.

அவ்வாறு எதுவும் அரசியல் குழுவில் நடந்ததாகத் தகவல்கள் இல்லை. அவர் பதவி நீக்கப்படுவதாக பதில் செயலாளர் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தபோது அரசியல் குழுவில் இருந்த அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்றே செய்திகள் வருகின்றன. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் அவ்வாறு பதவி எதுவும் நீக்கப்படவில்லை என்றே கூறியிருக்கின்றார்.
பதில் தலைவர் சிவஞானமும் அவ்வாறு பதவி நீக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றும் மட்டக்களப்பில் கூறியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியில் தற்போதுள்ள கட்டமைப்புகளில் மத்திய குழு என்றாலும் சரி, அரசியல் குழு என்றாலும் சரி, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட கட்டமைப்புகள் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.