காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - அதிகாரிகளின் அசமந்தப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர்
வட மாகாணத்தைப் பொறுத்தவரை, “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்” என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், வடக்கு ஆளுநர் தலைமையில் நேற்று(07.05.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனவேதனை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரால் மிக நீண்டகாலமாகப் பேரழிவுகளைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, “நிலைமாறுகால நீதிப் பொறிமுறை என்பது மிக முக்கியமானதொரு பேசுபொருளாகும். ஒருவர் உயிரிழந்தால் ஏற்படும் வலியை விட, அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என்றே தெரியாமல் “காணாமல் ஆக்கப்படுவதால்” ஏற்படும் வலி பல மடங்கு கொடியது.

என்றாவது ஒரு நாள் தமது உறவு வாசல் கதவைத் தட்டிவிட மாட்டார்களா? என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அந்தக் குடும்பங்களின் வலியை, அவர்களைத் தவிர வேறு எவராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது. நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், ஏனைய அலுவலகங்கள் இழப்பீடுகளை வழங்குவது மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது போன்ற கட்டமைப்புச் சார்ந்த விடயங்களைக் கையாளுகின்றன.
ஆனால், இந்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மாத்திரமே மனித உயிர்களுடனும், உணர்வுகளுடனும் நேரடியாகத் தொடர்புபடும் தளத்தில் இயங்குகிறது.
இந்த வேறுபாட்டையும் இதன் ஆழத்தையும் அதிகாரிகள் முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், இன்றைய இந்த விழிப்புணர்வுச் செயலமர்வின் உண்மையான நோக்கத்தை உங்களால் உள்வாங்க முடியும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஓய்வூதியம் வழங்கி வைப்பு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறை ஒருபுறம் சுயாதீனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குச் சமாந்தரமாக, எமது நிர்வாகக் கட்டமைப்பு இந்தக் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் ஒருகணம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

துயரங்களால் துவண்டுபோய் எமது அரச அலுவலகங்களின் படிகளை நாடி வரும் அந்த மக்களை, நாம் அவர்களுக்குரிய கௌரவத்துடன் நடத்தினோமா?
அவர்களின் தேவைகளைச் சிரமேற்கொண்டு பூர்த்தி செய்தோமா? அல்லது 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக', ஏற்கனவே பெருந்துயரில் தவிக்கும் அந்த உறவுகளை நாமும் அலைக்கழித்து, அதிகாரத்தின் இருமாப்புடன் அலட்சியப்படுத்தியிருக்கின்றோமா?

இந்தக் குற்றச்சாட்டை நான் அனைத்து அதிகாரிகள் மீதும் ஒட்டுமொத்தமாகச் சுமத்தவில்லை. ஆனால், அவர்களுக்கு உதவும் விடயத்தில் கூட எமது அதிகாரிகளிடத்தில் ஒருமித்த, மனிதாபிமானமிக்க நிலைப்பாடொன்று இன்னமும் முழுமையாக உருவாகவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
நீதியைத் தேடும் பொறிமுறை ஒருபுறம் தொடரும் அதேவேளை, அந்தக் குடும்பங்களின் அன்றாடப் பொருளாதார இருப்புக்காகக் கிடைக்க வேண்டிய காணாமல் ஆக்கப்பட்டவரின் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை எவ்வித தாமதமுமின்றிப் பெற்றுக்கொடுக்க எமது அதிகாரிகள் முன்னின்று உழைக்க வேண்டும் என்றார்.



சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam