ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்
ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பணயக்கைதிகள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இரண்டாவது சுற்றில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இதற்கு பதிலாக இஸ்ரேல் 200 பலஸ்தீனியக் கைதிகளை விடுத்துள்ளது.
விடுதலை செய்யப்படாத பணயக்கைதி
எனினும், அர்பெல் யூஹுட்(Arbel Yehud) எனப்படும் பணயக்கைதி விடுவிக்கப்படாததால், போர்நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பெண் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, தனது காதலுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரின் சகோதரர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் வாரம் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி
இவ்வாறான பின்னணியில், பணயக்கைதிகளின் விடுதலையை உலகம் கொண்டாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விடுதலையான பணயக்கைதிகளின் பெற்றோரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |