இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கிய அமெரிக்கா! மிரள வைக்கும் இராணுவ பலம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் திடீரென்று பலமுனை தாக்குதலை முன்னெடுத்து மிரள வைத்த பின்னர், கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் இராணுவ விமானங்கள் காஸா மீது கொடூர தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும் காஸா மீது பொழிந்து வருகிறது. இதன் பின்னர், தரைவழியாக தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.
ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர்
இந்நிலையில் உலகின் மிக சக்திவாய்ந்த 20 இராணுவங்களில் ஒன்றான இஸ்ரேலின் மொத்த இராணுவ பலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய 3 லட்சம் இராணுவ வீரர்களை திரட்டி, தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், இராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை திடீர் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் படைகளில் சுமார் 1,500 ஆயுததாரிகள் காஸா எல்லையில் புகுந்து நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், பணயக்கைதிகளாக பலரையும் சிறை பிடித்துள்ளனர்.
இஸ்ரேலிடம் 601 அதி நவீன இராணுவ விமானங்களும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் 48 ஹெலிகொப்டர்களும் 2,200 இராணுவ டாங்கிகளும் உள்ளன. 300 பலமுனை ராக்கெட் வீச்சு அமைப்புகள் உட்பட 1,200 பீரங்கிகளும் இஸ்ரேல் இராணுவத்திடம் உள்ளன.7 இராணுவ கப்பல்களும் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன.
ஆயுத உதவி
மொசாட் உட்பட உலகின் மிகவும் பாராட்டப்பட்ட உளவுத்துறை அமைப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது.
இராணுவத்திற்காக 2022ல் மொத்தம் 23.4 பில்லியன் டொலர்களை இஸ்ரேல் செலவிட்டுள்ளது. ஆனால் 2021ல் செலவிட்டுள்ள தொகையில் இருந்து இது 4.2 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவியை இஸ்ரேல் பெற்று வருகிறது. 2016ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 10 ஆண்டுகளுக்கான சுமார் 38 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இதில் 5 பில்லியன் டொலர் தொகைக்கு ஏவுகணை வாங்க பயன்படுத்தப்படும் என்றே கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி, கடந்த 20 ஆண்டுகளில் இராணுவ உதவிக்கென சுமார் 58 பில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துள்ளது.
தற்போது ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து, ஜோ பைடன் நிர்வாகம் ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
அக்டோபர் 6ம் திகதி சனிக்கிழமை முன்னெடுத்த தாக்குதலை அடுத்து இதுவரை இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 4,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.