இஸ்ரேலுக்கு தெற்கு லெபனானில் மரண அடி: ஹிஸ்புல்லாவின் ஏவுகணையில் நிலைகுலைந்த மெர்காவா டாங்கிகள்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பாரிய சேதங்களை விளைவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் அதிநவீன மெர்காவா (Merkava) டாங்கிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா நடத்திய சரமாரித் தாக்குதலில், ஒரே நாளில் டஜன் கணக்கான டாங்கிகள் உருக்குலைந்துள்ளதாக அந்த அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கடந்த புதன்கிழமை மட்டும் 21 மெர்காவா டாங்கிகள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலைக்குள் மேலும் 20 டாங்கிகள் எரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மார்ச் 2ஆம் திகதி முதல் இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தின் சுமார் 73 டாங்கிகள் ஹிஸ்புல்லாவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய கவச வாகனங்கள்
குறிப்பாக டெபெல் (Debel), அல்-கந்தாரா மற்றும் டாய்பே ஆகிய பகுதிகளில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன.

அதிரும் இஸ்ரேல் தற்போது லெபனான் எல்லையில் அரங்கேறி வரும் இந்தத் தாக்குதல்களின் வீரியமானது, கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் போரை நினைவுபடுத்துவதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அன்று இஸ்ரேலிய தரைப்படைக்கு ஹிஸ்புல்லா கொடுத்த அதே நெருக்கடியை இப்போதும் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இராணுவத் தளங்கள்
உயிரிழப்புகளை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் இந்தக் கடுமையான மோதல்களுக்கு மத்தியில், தெற்கு லெபனானில் தங்களது படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மார்ச் 8ஆம் திகதிக்குப் பிறகு உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இருப்பினும், டாங்கிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ட்ரோன் மற்றும் ஏவுகணை மழை நீண்ட நாட்களாகப் பொறுமை காத்து வந்த ஹிஸ்புல்லா, தற்போது இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் ட்ரோன்களைப் (Drones) பயன்படுத்தி பல டஜன் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.