கட்டாரை தாக்கிய இஸ்ரேல்.. ட்ரம்ப் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு
கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாளை அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், கட்டாரில் உள்ள தோஹா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
கட்டாரின் எச்சரிக்கை
"நான் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களைக் கூட்டி, ஹமாஸின் பயங்கரவாதத் தலைவர்கள் மீது ஒரு துல்லியமான தாக்குதலை மேற்கொள்ள அனுமதி வழங்கினேன்" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஹமாஸ், போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் நெதன்யாகு வலியுறுத்தியிருந்தார்.
அதேவேளை, அமெரிக்கா இந்த தாக்குதலில் தொடர்புபடவில்லை எனவும் குறித்த தாக்குதல் தொடர்பில் அதிருப்தி அடைவதாகவும் தெரிவித்திருந்தது.
ட்ரம்பின் நிலைப்பாடு
இதற்கிடையில், இஸ்ரேலின் இந்த கடுமையான தாக்குதலுக்கு கட்டார் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன், இஸ்ரேலின் இந்த மோசமான நடவடிக்கைக்கு எமக்கு பதில் தாக்குதல் நடத்த உரிமை உண்டு எனவும் இருப்பினும் நாங்கள் மத்தியஸ்தம் செய்யவே தீர்மானித்துள்ளோம் எனவும் கட்டார் அறிவித்திருந்தது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




