நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள்
நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இலங்கையில் உள்ள பஞ்ச
ஈஸ்வரங்களின் முதன்மையானதாக கருதப்படும் மன்னார் திருக்கேதீஸ்வர
திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கோவிட் பெருந்தொற்று காரணமாக
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமாகி
நடைபெற்று வருகிறது.
3 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மாத்திரமே பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவம் ,பொலிஸ், சுகாதாரத்துறையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடு இன்று சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா, கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்த அடியார்கள் புடை சூழ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் பூஜைகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு
மகா சிவராத்திரி விரத நிகழ்வுகள் இன்று இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக ராஜ கோபுரத்தை உடைய மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் காலை முதல் ஆரம்பமாகியது.
ஆலயத்திற்குச் சித்தர்களால் நர்மதா நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட உயிர் சிவலிங்கத்திற்கு அடியார்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு புஷ்கரணியில் தீர்த்த நீரை எடுத்து வந்து அபிஷேகம் பண்ணுதலுடன் ஆரம்பமாகிய இவ் அபிஷேக நிகழ்வானது இன்று காலை முதல் இன்று பின்இரவு வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது தங்களது ராசிகளுக்கு உரிய அபிஷேக திரவியங்களால் அடியார்கள் அபிஷேகம் செய்ததுடன் மேலும் இன்று லிங்கோற்பவ காலத்தில் ஏகாதச ருத்ர வேள்வியும் நடைபெற்று வருகின்றது.
இன்று இரவு முழுவதும் நான்கு ஜாம பூஜை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.விமலானந்தராஜா கூறியுள்ளார்.
செய்தி - குமார்
ஹட்டன்
மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தில் இன்று (01) காலை ஆறுமணி முதல் பகல் 12 வரை பாலாபிஷேகம் நடைபெற்றது.
இந்த பாலாபிஷேகத்தினை தொடர்ந்து சிவராத்திரியினை முன்னிட்டு லிங்கேஸ்வர பெருமானுக்கு நான்கும் சாமமும் பால், தேன், நெய், எண்ணை, மற்றும் திரவிய அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் பொது மக்கள் சுகாதார பொறிமுறைகளை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மக்கள் ஆன்மீக சிந்தனையிலிருந்து விலகி பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டுவருவதனால் உலகில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கலியுகத்தில் இன்றுள்ளவர்களின் தீய செயல்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இன்று சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நிம்மதியின்றி அங்குமிங்கும் அலைந்து திரிக்கின்றனர்.
இன்றுள்ள இளைஞர்கள் சுகபோகங்களுக்கும், அற்பசொற்ப வாழ்க்கை முறைக்கும் அடிபணிந்து செயல்படுவதனால் இன்று அநாவசியமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஆபத்து எம்மை தேடிவருவதற்கும் இதுதான் காரணமாக இருந்துள்ளன. எனவே இந்த கலியுகத்தினை கடப்பதற்கு இறை பக்தி இன்றியமையாதது. ஆகவே இன்று சிவராத்திரி தினத்தில் நான்கு சாம பூஜைகளிலும் கலந்து கொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெற வேண்டும் என ஹட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தின் பிரமகுரு கணபதி யோகி தெரிவித்துள்ளார்.
செய்தி - திருமால்
மன்னார்
நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களின் முதன்மையானதாகக் கருதப்படும் மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹாசிவராத்திரி திருவிழா கோவிட் பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
3 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மாத்திரமே பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இராணுவம், பொலிஸ், சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும் மன்னார் மாவட்டச் செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளி நிர்வாக ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தி பூர்வமாகப் பூஜைகள் நடைபெற்று வருவதுடன், பக்தர்களும் மிக அமைதியாகத் தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே திருக்கேதீஸ்வரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டுள்ளது.
செய்தி - ஆஷிக்








